தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம், மருத்துவ மேற்படிப்பு, டிப்ளமோ படிப்புக்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க மறுப்பு! - medical colleges OBC quota
14:46 October 15
மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு வியாழக்கிழமை (அக்.15) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஒபிசி பிரிவினருக்கு இந்தாண்டு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் உள்ள மொத்த இடங்களில் 15 சதவீத இடங்களை மத்திய அரசுக்கு, அகில இந்திய ஒதுக்கீடாக வழங்க வேண்டும். அதேபோல், மருத்துவ மேற்படிப்புக்களுக்கான இடங்களில் 50 சதவீத இடங்களையும், அகில இந்திய ஒதுக்கீடாக வழங்க வேண்டும். ஆனால் இந்த இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. இதில், 50 சதவீத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு மறுப்பதால், இப்பிரிவு மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.