இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் தொழில் துறை அனைத்தும் முடக்கப்பட்டதால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு ஒரு திட்டத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி செவ்வாய்க்கிழமை மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, "20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படும். இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 விழுக்காடு. இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் நாட்டின் பலதரப்பட்ட மக்கள் பயன்பெறுவர். அடுத்து இரண்டு மூன்று நாள்களில் இது குறித்த தகவல்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார்" என்றார்.
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிடைத்துவருகிறது. சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், "முன்பு ரூ.15 லட்சம் தருவதாக வாக்குறுதி அளித்தீர்கள். இப்போது ரூ.20 லட்சம் கோடிக்கு வாக்குறுதி அளித்துள்ளீர்கள். நீங்கள் 133 கோடி இந்தியர்களிடம் 133 முறை பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளீர்கள்.