புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்திவருகின்றனர். அடுத்தகட்டமாக நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்புவிடுத்துள்ளன. இதற்கிடையே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நிலையில், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றது.
நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களில் விவசாயிகளின் குறைகளைக் கருத்தில்கொண்டு திருத்தம் மேற்கொள்ள வழிவகைச் செய்யப்படும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வாக்குறுதி அளித்தார். ஆனால், வேளாண் சட்டங்களை நீக்க வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருந்ததால், எந்தவித முன்னேற்றமுமின்றி பேச்சுவார்த்தை முடிந்தது.