கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில், மதுபானம் விற்பனை செய்ய அனுமதியளிக்க வேண்டும் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் உள் துறை அமைச்சகத்திற்குக் கடிதம் எழுதியிருந்தார். கடைகள் மூலம் விற்பனை செய்ய அனுமதியளிக்க முடியாதபட்சம் வீடுகளுக்குச் சென்று மதுபானம் விற்க அனுமதியளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்திருந்தார்.
ஊரடங்கு அமல்படுத்திப்பட்ட பின் அனைத்து மாநில வருவாயும் பெருமளவு குறைந்துவிட்டது. பஞ்சாப் மாநிலம் மதுபான விற்பனை மூலம் மட்டும் மாதத்திற்கு 550 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் உள் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களில் ஊரடங்கு காலத்தில் மதுபானம், புகையிலை, குட்கா பொருள்களின் விற்பனை முற்றிலும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
பஞ்சாப் முதலமைச்சரின் கோரிக்கையைப் பரிசீலனை செய்த உள் துறை அமைச்சகம், எந்த மாநிலத்திற்கும் மதுபானம் விற்பனை செய்ய அனுமதியளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
அமரீந்தர் சிங் கோரிக்கை
தனது கடிதத்தில் மாநிலத்தின் வருவாய் நிலைமையைச் சுட்டிக்காட்டியுள்ள அமரீந்தர் சிங், தற்போதுள்ள நிலைமையை மீட்டெடுக்கப் பஞ்சாப் மாநிலத்திற்கு ரூ. 7,400 கோடி தேவை என்றும் இடைக்கால நிவாரணத் தொகையாக உடனடியாக ரூ.3,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.