பீகார் மாநிலம் முசாஃபர்பூர், அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மூளைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை 173 பேர் உயிரிழந்தனர். அதில் 150க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. இந்தக் காய்ச்சலால் நாளுக்குள் நாள் அதிகரித்துவரும் உயிரிழப்புகள் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தேசிய செயலாளரும் பீகார் மாநில காத்வா தொகுதி எம்எல்ஏ-வுமான ஷகில் அகமது கான் மத்திய மாநில அரசுகள்தான் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சரான ஹர்ஷ்வர்தன் 18 நாட்கள் கழித்தும், மாநில உள்துறை அமைச்சர் மங்கள் பாண்டே, மத்திய இணை அமைச்சர் அஸ்வினி சவ்பே 20 நாட்கள் கழித்தும் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வந்தனர். இது அவர்களின் பொறுப்பில்லாத தனத்தைக் காட்டுகிறது. எனவே அவர்கள் இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்று தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.