புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புதுச்சேரி மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கவும், மக்களின் சுகாதாரத்தை உறுதிசெய்யவும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டிய இச்சமயத்தில் புதுவை முதலமைச்சர் திரும்பவும் உண்மைகளைத் தவறாகச் சித்தரிப்பதுடன் அரசியல் விளையாட்டை மேற்கொள்வது வருத்தமாகவுள்ளது.
மத்திய அரசுக்கும் ஆளுநருக்கும் எதிராக அவர் தொடர்ந்து பல்வேறு தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார். குறிப்பாக மத்திய அரசிடமிருந்து சிறு உதவி கூட கிடைக்கவில்லை எனக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது.
மத்திய அரசு பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் 83 ஆயிரம் பேருக்கு தலா 500 ரூபாய் வீதம் 4.15 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பிரதான் மந்திரி கிசான் சமான் திட்டத்தின் கீழ் 9 ஆயிரத்து 299 பேருக்கு தலா 2,000 ரூபாய் வீதம் 1.85 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.