புதுச்சேரி மாநகரில் பல மேம்பாலங்கள் உள்ளடக்கிய நான்கு வழிச்சாலைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்றும், இந்தச் சாலை மேம்பாடு பல 130 கோடி ரூபாய் செலவில் உருவாகிறது என்றும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியப் பொருளாதாரம் மிக மோசமாக உள்ளதற்கு காரணம் உள்நாட்டு குழப்பம். பெரும்பாலான நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்துள்ளன. இதனால் பொருளாதாரம் சீர்கெட்டுள்ளது.
இதை திசைதிருப்பத்தான் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவை நம் நாட்டில் இயற்றப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் பல்வேறு இடங்களில் வன்முறையும் ஏற்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு தடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுள்ளது கண்டனத்துக்குரியதாகும்” எனக் கூறினார்.