இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்), என்பது இந்தியாவில் தடை செய்யப்பட்ட கட்சியாகும். மாவோயிஸ்ட் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் அபய் என்பவரின் பெயரில், வெளியான இரண்டு பக்கக் கடிதம் தெலுங்கில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக்கடிதம் ஜார்க்கண்ட் மாநில உளவுத்துறை காவலர்களுக்கும் கிடைத்துள்ளது.
அதில், பீமா கோரிகன் சம்பவத்திற்குப் பிறகு, நகர்ப்புற நக்சலைட்டுகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வரவர ராவ், கௌதம் நவ்லகா, ஆனந்த் டெல்டுன்பேட் ஆகியோரையும்;
மாவோயிஸ்ட் என்று குற்றஞ்சாட்டப்பட்டு நீண்டகாலமாக சிறையிலிருக்கும் பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய ஜார்க்கண்ட் மாநில காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் முராரி லால், "இந்த கரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களைக் காப்பதில் நாங்கள் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறோம். இருந்தபோதிலும் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான போரையும் நாங்கள் நடத்திவருகிறோம். கடந்த வாரத்தில் நடைபெற்ற இரண்டு என்கவுன்ட்டரில் 6 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்ட்கள் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டவர்கள் அரசியல் கைதிகள் அல்ல" என்றார்.