உலகளாவிய பெரும் அச்சுறுத்தலாகியிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்றுநோய் இந்தியாவில் அதிதீவிரமடைந்து வருகிறது. சர்வதேச நாடுகளில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் இந்தத் தாக்கம் இந்தியத் துணைக்கண்டத்தில் உயிரிழப்புகளோடு மற்றொரு வகையிலும் பாதித்துள்ளது.
மத்திய அரசின் ஆதரவு குறைந்த நிலையில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உழன்றுவந்த மாநில அரசுகளின் வருவாயை அது இன்னும் பேரழிவிற்கு அழைத்துச் சென்றுள்ளது. கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட எட்டு வார ஊரடங்கு, மாநிலங்களின் பொருளாதாரத்தின் சுகாதார மற்றும் நலன்புரி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி செலவு செய்திட வேண்டிய சூழலைக் கூடுதலாக சுமத்தியது.
கடுமையான வருவாய் நெருக்கடியை எதிர்கொள்ளத் தொடங்கிய மாநில அரசுகள், அனைத்தும் ஒரே நேரத்தில் தங்களுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் முறையிட்டன. கூடுதல் செலவினங்களைச் சமாளிக்க அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதலமைச்சர்களும் தங்களது மாநிலத்திற்கு நிதி பற்றாக்குறை வரம்பில் தளர்வு அளிக்க வேண்டுமென கோரினர்.
நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (fiscal responsibility and budget management - FRBM)சட்டத்தின் கீழ், மாநிலங்கள் தங்கள் நிதி பற்றாக்குறையை 3 % கீழ் வைத்திருக்க வேண்டியது கட்டாயமான ஒன்றாக இருந்தாலும் இந்த இக்கட்டான சூழ்நிலையின் பொருட்டு நடப்பு நிதியாண்டில் மாநிலங்கள் அதிக தளர்வு அளிக்க கோரிக்கை விடுத்தன.
நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து காப்பதற்காக மத்திய அரசு பிரமாண்டமாக அறிவித்த 20 லட்சம் கோடி சிறப்பு ஊக்க நிதித் தொகுப்பிலிருந்து இதுவரை எந்த மாநில அரசும் உண்மையில் பயனடையவில்லை. மாநிலங்களின் கடன் வாங்கும் திறனை 5 விகிதமாக உயர்த்த மத்திய நிதியமைச்சர் எடுத்த நடவடிக்கை பாராட்டத்தக்கதுதான் என்றாலும், முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவே உள்ளன.
இந்த நிதியாண்டில் 3 விழுக்காடு வரம்பின் கீழ் மாநிலங்கள் மொத்தம் 6.41 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கலாம். ஆனால், கூடுதல் 2 விழுக்காடு கடன் ( இந்திய ரூபாய் மதிப்பிலான 4.28 லட்சம் கோடி) மாநிலங்கள் சில சீர்திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என்கிறது அந்த நிபந்தனை. இந்த 2 விழுக்காடு கடனின் ஒரு பகுதி குறிப்பிட்டளவில் சாத்தியமான சீர்திருத்தங்களுடன் இணைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
மத்திய அரசின் சிறப்பு நிதி ஊக்கத் தொகுப்பில் மாநில அரசுகளுக்கு என்ன பயன்? அதாவது, மாநில அரசுகள் கோரிய முழு 5 விழுக்காடு நிதி பற்றாக்குறை தளர்த்தலைப் பெறுவதற்கு நான்கு சீர்திருத்தப் பகுதிகளில் (ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு, மின்சார சீர்திருத்தங்கள் போன்றவை மத்திய அரசின் திட்டங்களில்) குறைந்தது மூன்று இடங்களில் மாநிலங்கள் நிர்ணயிக்கப்பட்ட மைல்கற்களை அடைய வேண்டும் என்பதே அந்த உள்ளர்த்தம்.
கடந்த 2017 ஜூலை 1 ஆம் தேதியன்று சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அறிமுகப்படுத்தும்போது, “ஜிஎஸ்டி என்ற புதிய முத்தை இந்தியாவின் அழகிய அணிகலனில் நாங்கள் சேர்க்கிறோம். இது ஒரு இந்தியாவின் வளர்ச்சியை, உணர்வை பலப்படுத்தும்”என்றார். அதற்கு முன்பு வரை மத்திய, மாநில அரசுகள் விதித்துவந்த பல வரிகளை இந்த முத்தான ஜிஎஸ்டி வரி மாற்றியது. மாநில அரசுகளின் புள்ளியிலிருந்து அணுகினால் நிதி மையமாக மத்திய அரசு உருப்பெற்றது எனலாம்.
சொந்த மூலதன ஆதாரங்களில் இருந்து மாநிலங்கள் பெற்றுவந்த வருவாயின் பங்கு (2014-2015 ஆம் ஆண்டில்) 55 விழுக்காட்டிலிருந்து (2020-2021ஆம் ஆண்டில்) 50.5 விழுக்காடாகக் குறைந்தது.
மாநிலங்கள் மத்திய அரசைவிட ஒன்றரை மடங்கு அதிகமாக செலவு செய்து வந்தாலும், மத்திய அரசின் கையிலுள்ள ஜிஎஸ்டி வரி வருவாய் மாநிலங்களை அதன் தற்சார்பை குறைத்து மத்திய அரசை எதிர்ப்பார்க்கும் சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. மாநில அரசுகளிடம் 2015 மற்றும் 2020 இடையில் சுமார் 6.84 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இது 14ஆவது நிதி ஆணையத்தால் திட்டமிடப்பட்டதைவிட மிக அதிகம்.
கரோனா பெருந்தொற்றுநோய் மாநில அரசுகளின் வருவாயைச் சீர்குலைத்துள்ள நிலையில், மாநில அரசுகள் தவித்து வருகின்றன. இதன் பின்னணியிலேயே, மத்திய அரசின் நிதி உதவி மீதான வட்டியைக் குறைக்கவும், மத்திய நிறுவனங்களிலிருந்து பெற்ற கடன்களை மறுபரிசீலனை செய்து அவற்றின் மீதான வட்டியைத் தள்ளுபடி செய்யவும் மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளன என்பதையும் உணரலாம். ஆனால், இதுவரை இதற்கு ரிசர்வ் வங்கியிடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ எந்த உத்தரவாதமும் கிடைக்கவில்லை.
போர் பதற்றச் சூழ்நிலைகள், இயற்கை பேரழிவுகள், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளிட்டவை ஏற்பட்டால் அதனை கையாள பரிந்துரை வழங்க என்.கே.சிங் தலைமையில் 2017ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட குழு வழங்கிய பரிந்துரையில் பணவியல் கொள்கையை எளிதாக்குவது, பணப்புழக்கத்தை அதிகமாக்க நாணயத்தை அச்சிடுவது, ரிசர்வ் வங்கியிலிருந்து நேரடி அரசு கடன் வழங்குவது உள்ளிட்டவற்றை குறித்தும் மத்திய அரசு பதிலை அளிக்கவில்லை.
மத்திய அரசு நில பிரபுத்துவ சிந்தனையை வெளிப்படுத்தி, மாநில அரசுகளை பிச்சைக்காரர்களைப் போல் நடத்துகிறது என தெலங்கானா முதலைச்சர் சந்திரசேகர ராவ் காட்டமாக விமர்சித்துள்ளதை இதன் பின்னணியிலேயே நாம் காண முடிகிறது.
புதிய இந்தியா - மேக் இன் இந்தியா போன்றவற்றின் வரிசையில் "தற்சாப்பு இந்தியா" என்ற புது சொல்லை உச்சரிப்பதில் மத்திய அரசு மிகவும் மும்முரமாக இருப்பதால், மாநிலங்களின் நிதி அவலங்கள் குறித்து கவனம் செலுத்த மறக்கலாமா?
இதையும் படிங்க :பங்குதாரர்கள் 25 விழுக்காடு தொகையை மட்டும் கொடுத்தால் போதும்! - ரிலையன்ஸ்