தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமான பூவுலகின் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த காணொலி வாயிலான நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, சாகர்மாலா திட்டம், மத்திய அரசின் கட்டடங்கள் விஸ்தரிப்பு திட்டங்கள், நியூட்ரினோ மற்றும் நிலக்கரி சுரங்க விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் பேசினார்.
சாகர்மாலா திட்டம்
சாகர்மாலா திட்டம் குறித்து பேசிய ரமேஷ், “கடற்கரைகள் மற்றும் கடல் பல்லுயிர் வாழ்வியலைப் (கடல்வாழ் உயிரினங்கள்) பாதுகாப்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். மக்கள் நில பல்லுயிர் வாழ்விடங்கள் பற்றி அறிந்திருக்கிறார்கள். ஆனால் கடல் பல்லுயிர் வாழ்வினங்கள் மீது கவனம் செலுத்தவில்லை. கடல் பல்லுயிர் வாழ்நிலை மாற்றத்தின் மீதான மாற்றம் மக்களின் வாழ்க்கையில் பல தாக்கங்களை ஏற்படுத்தும்” என்றார்.
இதையடுத்து, நிலக்கரி சுரங்கப் பிரச்னை குறித்து பேசினார். அப்போது, “கடந்தகால பேரழிவு விளைவுகளிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தினார்.
மேலும், தமிழ்நாட்டில் தேனி மாவட்ட உள்ளூர்வாசிகளால் ஆட்சேபிக்கப்படும் நியூட்ரினோ திட்டம் மீதான எதிர்ப்பு, “தேவையற்றது” என்று கூறினார்.
நியூட்ரினோ திட்டம்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தபோது, நியூட்ரினோ திட்டத்திற்கு முதலில் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தோம். அந்த இடத்தை மதிப்பிடும்போது, ஏராளமான ஆபத்து காரணிகள் உள்ளன என்பதை நாங்கள் அறிந்தோம்.
எனவே, நாங்கள் ஒரு முழுமையான ஆய்வு செய்து, தமிழ்நாட்டில் அமைந்துள்ள இரண்டாவது இடத்தை முடிவு செய்தோம். இருப்பினும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மக்கள் இதனை எதிர்க்கின்றனர். நான் ஏற்கனவே இத்திட்டம் குறித்து மதிப்பீடு செய்துள்ளேன். இந்தத் திட்டத்தை அந்த குறிப்பிட்ட இடத்தில் செயல்படுத்துவதில் எவ்வித ஆபத்தும் இல்லை என்பதை நான் அறிவேன்” என்றார்.
குறுகிய கண்ணோட்டம்
எனினும், டெல்லி நாடாளுமன்ற விஸ்தரிப்பு உள்ளிட்ட திட்டங்கள் குறுகிய கண்ணோட்டம் கொண்டவை என்று விமர்சித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “மத்திய அரசின் விஸ்தரிப்பு திட்டங்களை செயல்படுத்த இது சரியான நேரம் அல்ல. ஆகவே, தொற்றுநோய்கள் நெருக்கடியின்போது விஸ்தரிப்பு திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.30 ஆயிரம் கோடியை வேறு பணிகளுக்கு செலவிட வேண்டும்.
தற்போதைய கட்டடங்கள் காலனித்துவ சக்தியைக் குறிக்கின்றன என்றாலும், நமது அரசியல் சக்தியைக் குறிக்க ரூ.30 ஆயிரம் கோடியுடன் விஸ்தரிப்பு செய்ய வேண்டிய நேரம் இதுவல்ல. இது பற்றி நிபுணர்களிடம் ஆலோசிக்கலாம். ஆனால் மத்திய அரசு அதிக நேரம் காத்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்றார்.
இதையும் படிங்க: சாகர்மாலா திட்டம் குறித்து மீனவர்களிடம் கருத்துக் கேட்பு