காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு காணொலி கலந்தாய்வு முறையில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்களுடன் அனைத்து காங்கிரஸ் முதலமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, "மே 3ஆம் தேதிக்குப் பின் நிலைமையை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து மத்திய அரசுக்கு எவ்வித தெளிவான திட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. இதே நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அது பேரழிவை உண்டாக்கும்" என்றார்.
ஊரடங்கு குறித்துப் பேசிய அவர், "ஊரடங்கு தொடரும் நிலையில் நம் மக்கள் சந்தித்துவரும் துன்பங்களும் தொடர்கின்றன. குறிப்பாக விவசாயிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் மிகக் கடுமையாக இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறினார்
இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பைக் காங்கிரஸ் வழங்கும் என்று பலமுறை பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளதைக் குறிப்பிட்ட அவர், ஊரடங்கின்போது மக்களின் துன்பங்களைக் குறைக்க பல்வேறு பரிந்துரைகளை வழங்கியதாகவும் ஆனாலும் அவற்றை அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் வேதனை தெரிவித்தார்.
மத்திய அரசின் உறுதியற்ற தன்மையையும் இரக்கமற்ற தன்மையையுமே இது காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் உணவு தானியங்கள் தேவைப்படுவோர்களிடம் சென்று சேரவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.