இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை என்றும், இதற்காக அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், 50 நாட்களுக்குப் பிறகு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற சாதனையையும் சந்திரயான் படைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படுவதை தொலைக்காட்சி வழியாக கண்டுகளித்த பிரதமர் மோடி, இதுவரை யாரும் தரையிறங்காத நிலவின் தென்துருவத்தில் தரையிறங்குவதன் மூலம் சந்திரயான் 2 தனித்துவத்தை பெற்றுள்ளதாகவும், நிறைய இளைஞர்கள் இதுபோன்ற ஆராய்ச்சி துறையில் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்றும், ட்வீட் செய்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சந்திரயான் 2 வெற்றி இளைஞர்களிடையே விண்வெளி ஆராய்ச்சிக்கான ஆர்வத்தைத் தூண்டும் என்றும், சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மக்கள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், சந்திரயான் 2 வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், இன்றைய வெற்றி நமக்குப் பெருமை தேடிதந்துள்ளதாகவும், சமூகமாக நாம் முன்னேற தொடர்ந்து விஞ்ஞானத்தில் வளர வேண்டும் என்றும் ட்வீட் செய்துள்ளார்.
அதேபோல கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், "130 கோடி இந்தியர் உதடுகள் முணுமுணுக்கின்றன. 'வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை' - இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்தி இந்தியா எழுந்து நின்று கைதட்டுகிறது" என்று ட்வீட் செய்துள்ளார்.