கிழக்கு லடாக்கிலுள்ள இந்தியப் பகுதிகளில் முகாம்கள் அமைப்பதன் மூலம், அப்பகுதிகளின் நிலைமையை மாற்றலாம் என சீனா நினைக்கிறது. இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி லடாக் பாங்காங் ஏரிக்கரையில் இந்திய- சீன வீரர்கள் மோதிக்கொண்டனர்.
இதில் இருநாட்டு வீரர்களும் காயமுற்றனர். இந்தப் பகுதிகளில் பதற்றம் தொடர்ந்து நிலவிவருகிறது. இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து இருநாட்டு ராணுவ பிரதிநிதிகளும் சனிக்கிழமை (ஜூன்6) சந்தித்துக் கொண்டனர். இந்திய ராணுவ குழுவுக்கு லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமை தாங்கினார். சீன பிரதிநிதியாக தெற்கு சின்ஜியாங் ராணுவ பிராந்திய தளபதி மேஜர் ஜெனரல் லியு லின் தலைமை தாங்கினார்.
இதையடுத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை7) வெளியிட்ட அறிக்கையில், லடாக்கில் நிலவும் சூழ்நிலையை 'அமைதியாக தீர்க்க' இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டதாக தெரிவித்திருந்தது.
அந்த அறிக்கையில், “இருதரப்பு உடன்படிக்கைகளின்படி எல்லைப் பகுதிகளின் நிலைமையை அமைதியாகத் தீர்ப்பதற்கும் இருதரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இந்தியா-சீனா எல்லைப் பிராந்தியங்களில் அமைதி அவசியம் என்று தலைவர்களுக்கிடையே உடன்பாடு எட்டப்பட்டது” என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் முப்படைகளின் முதல் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது முப்படை தலைமை தளபதிகளும் உடனிருந்தனர்.