கரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. இதனால், இந்த கல்வியாண்டில் மாணவர்களின் பாடச்சுமைக் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 விழுக்காடு குறைக்கப்பட்டது. அதில், உள்ளாட்சி, குடியுரிமை, பன்மைத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் இருந்த பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதற்கு அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள் உட்பட பலர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். ஆளும் பாஜக அரசு, ஒரு குறிப்பிட்ட கருத்தியலை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லப்பார்க்கிறது என குற்றஞ்சாட்டப்பட்டது. பாஜகவின் இந்தச் செயல் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் பாடத்திட்டம் நீக்கப்பட்ட விவகாரம் தவறானதாக திரிக்கப்பட்டுவிட்டது என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.