உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்தப் பெண்ணின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தக் குற்றச் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு மாநில காவல் துறையிடம் இருந்து மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்றப்பட்டது. இந்நிலையில் சிபிஐ குழுவினர் உயிரிழந்தப் பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்களிடம் நேற்று மதியம் (அக்.,17) விசாரணையைத் தொடங்கினர்.
சுமார் 5 மணி நடைபெற்ற இந்த விசாரணையில், சம்பவம் நடந்த செப்டம்பர் 12ஆம் தேதியன்று வீட்டில் யார் யார் இருந்தார்கள்? என்பது குறித்து கேட்கப்பட்டது.
உயிரிழந்தப் பெண்ணுடைய உறவினர் ஒருவரிடம், கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் குறித்து கேள்விக் கேட்கப்பட்டது. அதற்கு அப்பெண் தனக்கு தெரியாது எனப் பதிலளித்துள்ளார். ஹத்ராஸ் சம்பவம் தொடர்பான கேள்விகளைத் தான் விசாரணைக் குழுவினர் கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த அக்டோபர் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடந்த அக்டோபர் 13ஆம் தேதி பாலியல் குற்றம் நிகழ்ந்த இடம், அந்தப் பெண் எரிக்கப்பட்ட இடம், அந்தப் பெண்ணின் வீடு ஆகியவற்றை விசாரணைக் குழு ஆய்வு மேற்கொண்டது.
கடந்த நான்கு நாள்களாக ஹத்ராஸில் முகாமிட்டுள்ள புலானாய்வுத் துறை குழுவினர், வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உத்தரப் பிரதேச காவல் துறையிடம் சேகரித்துள்ளனர். விசாரணை அறிக்கையை விரைவில் அரசிடம் தாக்கல் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஹத்ராஸ் விவகாரம்; விசாரணையை முடுக்கிவிடும் சிபிஐ