ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் மத்திய முன்னாள்அமைச்சர் ப. சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ அலுவலர்களால் கைது செய்யப்பட்டார். பின்னர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை கடந்த 12 நாட்களாக காவலில் எடுத்து அலுவலர்கள் விசாரித்துவந்தனர். இந்த நிலையில், தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ப. சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சிபிஐ காவல் முடிவடைவதால், நீதிமன்றக்காவலில் வைத்து அவரை விசாரிக்க அனுமதி அளிக்கக் கூடாது என்றும் வயது மூப்பைக் காரணம் காட்டி சிதம்பரத்தை வீட்டுக்காவலில் வைத்து விசாரிக்கவும் அனுமதி கோரியிருந்தார். இதையடுத்து நீதிபதிகள் அவரை திகார் சிறையில் அடைக்க தடை விதித்தும், இடைக்கால பிணை கேட்டு சிதம்பரம், விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் எனவும் அறிவுறுத்தியிருந்தனர்.
மத்திய முன்னாள்அமைச்சர் ப. சிதம்பரம் இந்த நிலையில், சிதம்பரத்தை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தியிருந்த நிலையில், இன்று ஒருநாள் காவலை நீட்டித்து உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து இன்றுடன் சிபிஐ காவல் முடிவடையும் நிலையில், அவரது இடைக்கால பிணை மனு மீது இன்று மாலை விசாரணை நடைபெறவுள்ளது.
சிபிஐ காவலுக்கு அனுப்பியதை எதிர்த்து ப. சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், நீதிமன்ற நடைமுறைகளை சிதம்பரம் தரப்பு முறையாக பின்பற்றவில்லை என்றும் சிதம்பரத்திற்கு சாதகமாக உத்தரவு கொடுத்தால் அது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
சிதம்பரத்தின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று குறிப்பிட்டுள்ள சிபிஐ, இந்தக் காவலை எதிர்த்து உயர் நீதிமன்றத்தைதான் நாட வேண்டும் என்றும் அவரது பிணை மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறது.