மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் நீண்ட நாள்களாக நிலவிவந்த பனிப்போர், சில நாள்களுக்கு முன் கடும் மோதலாக வெடித்தது.
இதனால், சச்சின் பைலட் மாநிலத்தின் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்தும், துணை முதலமைச்சர் பதவியிலிருந்தும் கழட்டிவிடப்பட்டார். இதையடுத்து, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சச்சின் பைலட் டெல்லியில் முகாமிட்டார்.
மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவை வைத்து ஆட்சியைக் கவிழ்த்த பாஜக, தற்போது பைலட் மூலம் ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க திட்டம் தீட்டிவருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டிவருகிறது. இது ஒருபுறமிருக்க, பாஜக இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. பைலட்டும் தன்னை பாஜக இயக்கவில்லை என்று கூறினார்.
இச்சூழலில், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங், பைலட்டின் ஆதரவாளர்களான பன்பர் லால் சர்மா, சஞ்சய் ஜெயின் ஆகியோருடன் எம்எல்ஏக்களை பாஜக பக்கம் இழுப்பது தொடர்பாக பேரம் பேசிய ஆடியோவை வெளியிட்டு காங்கிரஸ் பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து ராஜஸ்தான் மாநில காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
கஜேந்திர சிங் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்ததோடு, விசாரணைக்குத் தயார் என்றும் கூறினார். இதனிடையே சஞ்சய் ஜெயினைக் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.