ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ப. சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என அமலாக்கத் துறை டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தது.
இதையும் படிங்க:ப.சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்!
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ப. சிதம்பரத்தை அமலாக்கத் துறை விசாரிக்க அனுமதி அளித்தார். மேலும் தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் அனுமதி வழங்கியுள்ளார்.
மீண்டும் கைது?
இதனால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப. சிதம்பரம் மீண்டும் கைதாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு அவர் கைதாகும் பட்சத்தில், நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ப. சிதம்பரம் ஆகஸ்ட் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
முன்பிணை மறுப்பு
டெல்லி உயர் நீதிமன்றம் முன்பிணை மறுத்த நிலையில் அவர் மீது மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து அவர், உச்ச நீதிமன்றத்திலும் பிணை கோரி வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து திகார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப. சிதம்பரம், தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டி.கே.சிவகுமாரின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை!