உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கியில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் பொதுகூட்டம் நடத்தப்பட்டது. அப்போது பாஜக மூத்தத் தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவஸ்தவா இஸ்லாமியர்களை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இஸ்லாமியர்களை அழிக்க பாஜகவுக்கு வாக்களியுங்கள் - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு - பாஜகவுக்கு
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கியில் இஸ்லாமியர்களை அழிக்க பாஜகவுக்கு வாக்களியுங்கள் என ரஞ்சித் பகதூர் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறியதாவது, இஸ்லாமியர்களின் மன வலிமையை உடைக்க பிரதமர் மோடி பல முயற்சிகள் செய்துள்ளார். அவர்களின் இனப்பெருக்கத்தை அழிக்க அவருக்கு மீண்டும் வாக்களிக்க வேண்டும் என்றார். மேலும், நாட்டின் பிரிவினைக்கு பிறகும் முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதாகவும், விரைவாக அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றி விடுவார்கள் என தெரிவித்த அவர், பாஜக வெற்றிபெற்றால் தேர்தலுக்கு பிறகு முஸ்லிம்கள் அனைவரும் இந்துக்களாக மதமாற்றம் செய்யப்படுவார்கள் எனக் கூறினார். தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால் இவருக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் மதவாத கருத்துகளை தெரிவித்ததால் தேர்தல் ஆணையம் அவரை தேர்தல் பரப்புரையில் ஈடுபட 72 மணி நேரம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.