இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வரும் மே மாதம் 3ஆம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வைரஸ் பரவலின் வேகம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலர் லாவ் அகர்வால் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முன்பு, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று நாள்களில் இரட்டிப்பாகிவந்தது. ஆனால், கடந்த ஏழு நாள்களாக வைரஸ் இரட்டிப்பாக 6.2 நாள்கள்வரை ஆகிறது. மேலும், 19 மாநிலங்களில் வைரஸ் பரவலின் வேகம் என்பது தேசிய சராசரியைவிடக் குறைவாக உள்ளது.
புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 விழுக்காடுவரை குறைந்துள்ளது. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஏப்ரல் இரண்டாம் தேதிவரை வைரஸ் பரவலின் வேகம் 1.2 விழுக்காடாகக் குறைந்துள்ளது. முன்னதாக மார்ச் 15 முதல் 30 வரையிலான தேதிகளில் இது 2.1ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது" என்றார்.