ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஃபிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம்போட்டது. இந்த ஒப்பந்தத்தில் ரூ.58 ஆயிரம் கோடி வரை ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்தது. சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து, நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, “ரஃபேல் ஒபந்தத்தில் எந்த முறைகேடும் நடந்திருப்பதற்கான ஆதாரம் இல்லை. ஆகவே விசாரணைக்கு அவசியம் இல்லை” எனக் கூறி தள்ளுபடி செய்தது. இதையடுத்து ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சில ஆவணங்கள் ஊடகங்களில் கசிந்தன. இதனை ஆதாரமாகக் கொண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மனுக்கள் தாக்கலானது.
இந்த மனுக்களை முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே. கவுல், கே.எம். ஜோசப் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. இதற்கு மத்திய அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஊடகங்களில் கசிந்த ஆவணங்களைப் பாதுகாப்புத் துறையின் அனுமதியின்றி யாரும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. அவை அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்டவை என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் வாதிட்டார். மேலும், அவை இந்திய சாட்சிய சட்டப்பிரிவு 123இன் கீழும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8(1)(ஏ)இன் படியும் ஆதாரங்களாகப் பரிசீலிக்கப்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் மத்திய அரசின் வாதத்தை மறுத்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டவர்கள் வாதிட்டார்கள். இந்த நிலையில் மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். இதுதொடர்பான விசாரணை கடந்த மே மாதம் நடந்தது. அப்போது இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிகள் நோட்டீஸ் அனுப்பினர். இதற்கு பதிலளிக்க மத்திய அரசு நான்கு வாரம் அவகாசம் கேட்டது.
ஆனால் நான்கு நாள்கள் மட்டுமே அரசுக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்தது. இவ்வாறு இந்த வழக்கு விறுவிறுப்பாக நடந்துவந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று காலை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெறவில்லை எனக் கூறிய நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
ராகுல் காந்தி வழக்கு