ஊரடங்கில் தற்போது சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இருப்பினும் திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் குறைவான நபர்களே பங்கேற்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்திவருகின்றன.
இந்நிலையில், ஊரடங்கு குறித்து கவலை கொள்ளாமல் மாட்டின் இறுதிச் சடங்கில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் அருகில் கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்டுவந்த மாடு ஒன்று இறந்து கிடந்தது. இதைத்தொடர்ந்து மாட்டை ஊர்வலமாக எடுத்துச் சென்று புதைக்க கிராம மக்கள் முடிவெடுத்தனர். அதன்படி, மாட்டின் இறுதிச் சடங்கில் மட்டும் 100 பெண்கள் உள்ளிட்ட 150 பேர் ஊரடங்கை மீறி கலந்துகொண்டனர்.
மாட்டின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற மக்கள் கூட்டம் அப்போது எடுக்கப்பட்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து தகவலறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்தில் குவிந்தனர். காவலர்கள் வருவதை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஊரடங்கில் அதிகப்படியான மக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் ஊர்வலமாக வந்த குற்றத்திற்காக 150 பேர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையும் படிங்க:மாட்டு வண்டியில் 1000 கி.மீ. பயணம் - உ.பி. தொழிலாளியின் சோக பின்னணி!