நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மார்ச் இறுதி வாரத்தில் அனைத்து விமான நிறுவனங்களும் தங்கள் பயணிகள் விமான சேவையை நிறுத்திக்கொண்டன. இந்நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின் விமான சேவையைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
இருப்பினும் தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் விமான சேவையை தங்கள் மாநிலத்தில் அனுமதிப்பதில் தயக்கம் காட்டின.
விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தனது ட்விட்டர் பக்கத்தில், "நாட்டில் பயணிகள் விமான சேவையை மீண்டும் தொடங்க பல மாநில அரசுகளுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆந்திரா, மேற்குவங்கத்தைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் திங்கள்கிழமை விமான சேவை தொடங்கப்படும். ஆந்திராவில் 26ஆம் தேதி முதலும் மேற்கு வங்கத்தில் 28ஆம் தேதி முதலும் விமான சேவை தொடங்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், "மும்பையில் குறைந்தபட்ச அளவே விமான சேவை இருக்கும். மாநிலத்திலுள்ள மற்ற விமான நிலையங்களில் வழக்கமாக இயங்குவதில் மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.
சென்னையிலுள்ள விமான நிலையத்தில் அதிகபட்சமாக 25 விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படும். சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களுக்குக் கட்டுப்பாடு இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.
மேற்கு வங்க அரசின் அறிவுறுத்தலின்படி கொல்கத்தா, பாக்டோகிரா ஆகிய விமான நிலையங்களிலிருந்து தினசரி 10 விமானங்கள் மட்டுமே தரையிறங்கவும் புறப்படவும் அனுமதி அளிக்கப்படும்.
அதேபோல ஆந்திராவின் விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய விமான நிலையங்களில் வழக்கமாக இயங்குவதற்கு 20 விழுக்காடு விமானங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படும். ஹைதராபாத்தில் தினசரி 15 விமானங்கள் மட்டுமே தரையிறங்கவும் புறப்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் மூலம் வரும் பயணிகளும் கட்டாயம் தனிமைப்படுத்தும் முகாமில் 15 நாள்கள் வரை இருக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களும் அறிவித்துள்ளன. இதனால் பயணிகள் அதிகளவில் தங்கள் முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்துவருகின்றனர்.
இதுதவிர முக்கிய வழித்தடங்களைத் தவிர மற்ற அனைத்து வழித்தடங்களிலும் வெறும் 15 விழுக்காடு டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.
குறிப்பாக டெல்லி-மும்பை விமானங்களில் அதிகளவில் டிக்கெட்டுகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அதேபோல பெங்களூரூ-கொல்கத்தா வழித்தடத்திலும் அதிகளவில் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
இது குறித்து EaseMyTrip.com என்ற தளத்தின் நிர்வாக இயக்குநர் நிஷாந்த் பிட் கூறுகையில், "மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பயணிகள் தற்போது விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கின்றனர்.
ஆனால், ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு விதிமுறைகளை விதித்துள்ளதால், மக்கள் குழப்பமடைந்து டிக்கெட்டுகளை ரத்துசெய்கின்றனர். விமான பயணிகளை மீண்டும் அரசு கைவிட்டுவிட்டது" என்றார்.
விமான பயணிகள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம் (Home Quarantine) என்று அறிவித்தால், பொதுமக்கள் விமான போக்குவரத்தைப் பயன்படுத்துவது அதிகரிக்கும் என்பது துறைசார்ந்த வல்லுநர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: உள்நாட்டு விமான சேவை தொடக்கம் - சென்னையில் 15 விமானங்கள் ரத்து!