நாட்டில் 53 மில்லியன் டன் அளவுக்கு உணவு தானியக் கையிருப்பு உள்ளது; அதில், 30 மில்லியன் டன் அளவு அரிசி; மீதம் இருப்பது கோதுமை என்று இந்திய நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவு, பொது விநியோகத் துறை அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். குறைந்தபட்சம் இந்த அளவு உணவு தானியத்தை இருப்பில் வைத்திருக்க வேண்டும் எனும் அளவைவிட, இது மிக அதிகம் என்பதையும் நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது, 7.6 மில்லியன் டன் அரிசி, 13.8 மில்லியன் டன் கோதுமை அல்லது இரண்டும் சேர்த்து 21 மில்லியன் டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்களை இருப்பு வைத்திருக்க வேண்டும். இவ்வளவு தானியம் அரசாங்கத்தின் இருப்பில் இருந்தும் நாம் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லாத உண்மை ஒன்று உண்டு; அது, இந்திய நாட்டில் பசியால் வாடப்போகும் மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 200 மில்லியன் அதாவது 20 கோடி என்பதே! இது, இந்தியா திரும்பத் திரும்ப கூறிவரும், நெடுங்கால உணவுப் பாதுகாப்புக் கதை
நாட்டின் வறிய மக்களின் வீடுகளில் இருக்க வேண்டியது எதுவோ அது தானியக் கிடங்குகளில் இருக்கிறது. இப்போது பெரிய அளவிலான குறுவை சாகுபடி அறுவடைக்காகவும் அதன் மூலம் ஏராளமான அளவுக்கு தானியத்தைத் திரட்டி சேமித்துவைக்கவும் காத்திருக்கிறார்கள். 2019-20 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டின்படி, நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தியானது 292 மில்லியன் டன்களாக இருக்கும். சென்ற ஆண்டின் உணவு தானிய உற்பத்தியைவிட 6.74 மில்லியன் டன் கூடுதல் ஆகும். இப்போது ஒரே சமயத்தில் பசிப்பிணியையும் கோவிட்-19 கொள்ளை நோயையும் எதிர்கொண்டு இருக்கிறோம். குறிப்பாக, புலம்பெயர்ந்த வறியவர்களுக்கு இது மோசமான ஒரு கொடிய துயரச் சுமை ஆகும். இருப்பினும், நம்முடைய மக்களையும் நம்முடைய பொது சேவைகளையும் முறையாக சீர்செய்தால் மட்டுமே, கோவிட்- 19 கொள்ளை நோயின் பிடியிலிருந்து மக்களை முழுமையாகப் பாதுகாத்து, அனைவருக்கும் உணவளிக்க முடியும்.
இதற்கு முக்கியத் தேவையாக, பொது விநியோக அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவை (ஐ.சி.டி.எஸ்., - அங்கன்வாடி) திட்டம் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு விளங்க முடியும். கடந்த நாற்பது ஆண்டுகளாக ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்து, இந்தக் கட்டமைப்பை உருவாக்கி கட்டியெழுப்பி இருக்கிறோம். நம் நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் ஐ.சி.டி.எஸ். திட்டப் பணியாளர்கள் இருக்கின்றனர். இந்தப் பணியாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1.7 மில்லியன் இருக்கலாம். இது, நம் நாட்டின் ஆயுதப் படைகளின் ஒட்டுமொத்த தொகையைவிட அதிகமாக இருக்கலாம். நிச்சயம், இவர்கள் சமூகப் படை வீரர்கள் எனக் கூறமுடியும்.
தாக்கி அழிக்கக்கூடிய கோவிட் -19 கொள்ளை நோய் நெருக்கடியை எதிர்கொண்டு தேசமே முடக்கப்பட்டு உள்ள ஒரு கட்டத்தில், புலம்பெயர்ந்த மக்களுக்கு, முதன்மையாக அமைப்புசாரா துறைகளில் இருப்பவர்களுக்கு உயிர் வாழவே நெருக்கடி என்கிற அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவிட் -19 கொள்ளைக்கு எதிரான போர் என்பதன் அடிப்படையானது, முதலில் தீர்மானகரமாக பொதுவான இயக்கத்தையே அது தடை செய்வதாக இருக்கிறது. இப்படி இருக்கையில், இந்திய அமைப்புசாரா தொழில் துறைகளின் இருத்தல் அல்லது அதன் உயிர்ப்பு என்பது, முதன்மையாக மாநிலத்துக்கு உள்ளே, மாநிலங்களுக்கு இடையே என உள்நாட்டுப் புலப்பெயர்வை நம்பியே இருக்கிறது. அமைப்புசாரா தொழில் துறையின் இந்த இடப்பெயர்வுக்கான அடிப்படைக் காரணம், பசியே! புதிரான இந்த சங்கதி, எளிதில் தீர்க்கப்படக் கூடிய ஒரு பிரச்னை அல்ல. ஆகவே, இவ்விரண்டு மாறுபட்ட தர்க்கங்களுக்கும் இணக்கமான தீர்வுகளை கண்டுபிடித்து ஆக வேண்டும். இப்போதைய சூழலில் பசிதான், மிக அடிப்படையான அளவுகோல் ஆகும். இதேவேளை, இந்த புவியின் எந்தப் பகுதியிலும் கோவிட்-19 கொள்ளை நோய்க்கு தடுப்பு மருந்து இல்லை என்றே தெரிகிறது. இப்படியான நெருக்கடியில் நமக்கு நாமே எப்படி உதவிக்கொள்ள முடியும் என்பது கேள்வியே!
இந்த நெருக்கடியை எதிர்கொள்வதில் அரசுத் தலைவர் என்கிற முறையில் பிரதமரே தலைமை வகிக்கிறார். இந்தப் போரின் முன்னணிப் படை வீரர்களாகச் செயல்படும் மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன், பொது விநியோகத் திட்டம், குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் பணியாளர்களையும் உள்கட்டமைப்பையும் ஒருங்கிணைப்பதை அவர் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த மூல உத்தியின் அடிப்படையானது, போக்குவரத்துத் துறையில் என வைத்துக்கொண்டால் பணியாளர்களின் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கம் மற்றும் சாலைப் போக்குவரத்து செயல்பாடுகளை எளிதாக்குவது ஆகும். இந்திய ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான உண்மையான கூட்டாட்சி உணர்வையும் ஊக்குவிப்பதாகவும் இருக்கும். இதில், தொடர்புடைய அரசு நிறுவனங்கள் எவை என்றால், மையமான அளவில் உணவு தானிய வழங்கலுக்கு ஒன்றிய அரசின் இந்திய உணவுக் கழகமும், போதுமான கடனை அளிப்பதற்கு ரிசர்வ் வங்கியும் கிராம அளவில் போக்குவரத்து மற்றும் பொது விநியோகத்துக்கு மாநில அரசுகளின் முகமைகளும் ஆகும். வரக்கூடிய நாள்களில் புலம்பெயர்ந்த மக்களின் பயணத்துக்கு அனுமதி அளிப்பதில் ஒன்றிய, மாநில அரசுகளின் தலைவர்கள் எந்த அளவுக்கு பக்குவமாகவும் அறிவார்ந்த வகையிலும் முடிவு எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே, மூலவுத்தியானது பலன் தருவதாக இருக்கும். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், நுண்ணுயிரியல் மற்றும் பொதுசுகாதார வல்லுநர்கள் இவ்வாறுதான் அறிவுறுத்தி இருக்கின்றனர். இது, ஒரு சங்கடமான சமாளிப்பாக அமையும்.
வறட்சி, பஞ்சம் போன்ற காலங்களில் ஏற்படும் துயர்ப் பரவலை மட்டுப்படுத்த, கடந்த காலத்தில் செய்ததைப் போலவே, பொதுப் பணிகளை பரீட்சித்துப் பார்த்ததைப் போல, இப்போதும், நகர்ப்புற ஏழைகளின் வாழ்விடப் பகுதிகள், ஊர்ப்புறத்தில் உள்ள வறிய மக்களின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களும் பசியால் வாடுவோரும் எந்தெந்த இடங்களில் இருக்கிறார்களோ அந்த இடங்கள் என குறிப்பிட்டு பகுதிகளை முடிவுசெய்து, அங்கெல்லாம் இலவச சமையல் மையங்களை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் நாட்டில் பசிபட்டினி எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது எனும் ஒரு புவியியல் வரைபடத்தையும் நாம் கண்டறிய முடியும். மேலும், வறிய மக்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் அவர்களிடம் உணவு மற்றும் இணக்கப்பாட்டுக்கான நம்பிக்கையை உருவாக்குவதற்கான செயலூக்கமுள்ள வழிமுறையாகவும் இது இருக்கும். பசியுள்ளவர்கள் எல்லா இடங்களிலும் இருப்பதற்கான வாய்ப்பு உண்டு; ஆகவே, இப்படி உணவு வழங்குவதை எல்லா இடங்களிலும் மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து நகர்ப் புறங்களிலும் உள்ள குடிசைப் பகுதிகளில் இதைத் தொடங்க வேண்டும்; ஊரகப் பகுதிகளில் வறட்சியான விவசாயப் பகுதிகள், மேடான பகுதிகள், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள், வறட்சியால் பாதிக்கப்பட்டதும் பாலையான பகுதிகளிம் இந்த நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். இந்த வழிமுறையின்படி இந்தியாவில் பசியால் வாடும் கிட்டத்தட்ட 20 கோடி மக்களும் இதன் மூலம் பயன் அடைவார்கள். அங்கன்வாடி மையங்களின் வேலை நேரத்தையும் அவற்றின் பணியாளர்களின் வேலை நேரத்தையும் நீட்டித்து இந்த மாபெரும் பணியைத் தொடங்க முடியும். நாட்டின் ஒவ்வொரு கிராமவாசிக்கும் நகர்ப்புற குடிசைப் பகுதிக்காரருக்கும், எவ்வளவுதான் சரியில்லாமல் இருந்தாலும்கூட, அது தங்களுக்கான இடம் எனச் சொல்லிக்கொள்ளும் இடமாக விளங்குகிறது. மேம்பட்ட ஊக்கத்தொகை, பலவித பாதுகாப்பு வசதிகள், மருத்துவ வசதிகள், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்கப் பயிற்சி அளிப்பது, அவர்கள் ஒவ்வொருவருக்கும் குடும்ப காப்பீடு கிடைக்கச் செய்வது என சாத்தியமுள்ள வழிகளில் எல்லாம், அவர்களுக்குத் தேவையான முழு பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் முதன்மையானது விநியோகம்தான். தென் மாநிலங்களில் பொதுவிநியோகத் திட்டமும் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டமும் கிராம அளவிலான சிறந்த விநியோக மாதிரிகளாக இருக்கின்றன. தெலங்கானா, ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளத்தில் இதை எளிதாகச் செய்யமுடிகிறது. நம் நாட்டின் மூலை முடுக்குகளிலும் உள்ள பாதைகளைக் கண்டுகொள்வது, முதன்மைப் பகுதிகளில் இருந்து அதிக தொலைவில் புறக்காவல் அமைத்து காலூன்றுவதன் மூலம் பொதுத் தேர்தல்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பது வட மாநிலங்களுக்கான முன்மாதிரியாக இருக்கும். இதற்காக, அனைத்து அரசுப் பணியாளர்களும் வரவழைக்கப்பட்டு கூடுதலாக கணிசமான ஊதியமும் வழங்கப்பட வேண்டும். இத்துடன், தனி நபர் இடைவெளியையும் பாதுகாப்பு முறைகளையும் பின்பற்ற பயிற்சி அளிக்கவேண்டும்; அவர்களுக்கும் குடும்ப காப்பீடு அளிக்கவேண்டும்.