அமேசான் நிறுவனத்தின் தலைவரும், உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான ஜெப் பெசோஸ் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளார், இந்தப் பயணத்தின்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். இந்நிலையில், அவரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 300க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டம் நடத்தவுள்ளதாக அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனவரி 15ஆம் தேதி இந்தியா வரவுள்ள ஜெப் பெசோஸுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்தில் அனைத்திந்திய மொபைல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம், அகில இந்திய நுகர்வு பொருட்கள் விநியோகஸ்தர் கூட்டமைப்பு உட்பட ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தக கூட்டமைப்புகள் பங்கேற்கவுள்ளன.
இந்தப் போராட்டம் 300க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெறவுள்ளன. அமேசான் சிறு வர்த்தகர்களின் வளர்ச்சிக்கு உதவுவதாகத் தவறான தகவலை ஜெப் பெசோஸின் வருகை பரப்பும். அதைத் தடுக்கவே இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளோம். சொல்லப்போனால் அமேசான் நிறுவனத்தால் லட்சக்கணக்கான சிறு வர்த்தகர்கள் நாசமடைந்துள்ளனர்.