மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி சேவை வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் கோரிக்கைகள் வைக்கப்பட்டுவந்தது. தனியார் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடோஃபோன் நிறுவனங்களின் 4ஜி சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதித்தபோதும் அரசு பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இந்த அனுமதி வழங்கப்படாமலே இருந்துவந்தது.
மேலும், பிஸ்என்எல் - எம்டிஎன்எல் ஊழியர்களுக்கான ஊதியமும் முறையாக வழங்கப்படாமல் இருந்தது. இதனால் பிஸ்என்எல் - எம்டிஎன்எல் நிறுவனங்கள் விரைவில் மூடப்படலாம் என்ற செய்தியும் பரவியது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், 'பிஸ்என்எல் - எம்டிஎன்எல் நிறுவனங்கள் மூடப்படவோ விற்கப்படவோ மாட்டது' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.