திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக, டெல்லியில் ஏற்பட்ட போராட்டத்தில் மூன்று அரசுப் பேருந்துகள், இரண்டிற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. குறிப்பாக, தென்கிழக்கு டெல்லியில் உள்ள நியூ ஃபிரண்ட்ஸ் காலனியில் டி.டி.சி பேருந்துகள்(DDC Buses) தீக்கிரையாக்கப்பட்டன.
இந்த கலவரத்தில் ஒரு காவலரும், இரண்டு தீயணைப்பு வீரர்களும் காயம் அடைந்தனர் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், காங்கிரஸுடன் இணைந்த தேசிய மாணவர் ஒன்றியத்தின் தேசியச் செயலாளர் சைமோன் பாரூக்கி, ' மதுரா சாலையில் போராட்டக்காரர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர். ஆனால், காவல் துறையினர் அவர்களைத் தொந்தரவு செய்ய முயன்றபோது, அவர்கள் எதிர்த்தனர் ' எனக் கூறினார்.
ஜாமியா மில்லியா இஸ்லாமியா (Jamia Millia Islamia) பல்கலைக்கழகத் துணை வேந்தர் நஜ்மா அக்தர், ' மாணவர்களுக்கு தீ மற்றும் வன்முறையுடன் எந்த தொடர்பும் இல்லை. மேலும் உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் இணைந்து அதை சீர்குலைத்துள்ளனர் ' என்று குற்றம் சாட்டினர்.