வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வளைகுடா நாளேடு ஒன்றுக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது இந்திய நாட்டின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
வங்கதேச வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமனும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதே கருத்தை கூறியிருந்தார். தற்போது அந்நாட்டின் பிரதமரும் அவ்வாறு கூறியுள்ளார்.
ஷேக் ஹசீனா தனது பேட்டியின்போது, “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். ஆனால் இது ஏன் கொண்டுவரப்பட்டது எனப் புரிந்துக்கொள்ளமுடியவில்லை. இது தேவையற்றது” என்றார்.
மேலும் வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் அகதிகளாகச் செல்கின்றனர் என்ற கருத்துக்கு மறுப்பு தெரிவித்த ஷேக் ஹசீனா, இந்திய மக்களும் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்றார். குடியுரிமை திருத்தச் சட்டம் 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னர் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதத்துன்புறுத்தல் காரணமாக வெளியேறி இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு எளிதில் குடியுரிமை கிடைக்க வழிவகைசெய்கிறது.
இந்திய குடியுரிமைக்கு சுமார் மூன்று கோடியே 30 லட்சம் மக்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 19 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தேசிய குடிமக்கள் பதிவேடு அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஊடுருவியிருக்கும் வெளிநாட்டினரைக் கண்டறிய கொண்டுவரப்பட்டது.
இதையும் படிங்க: நாகாலாந்து அமைதி ஒப்பந்தம் குறித்து அசாம் முதலமைச்சர் கருத்து!