தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மக்கள் கையில் சாட்டை - நேர்மையான தேர்தலுக்கு வழிவகுக்குமா cVIGIL?

டெல்லி: நேர்மையான தேர்தல் நடைபெற, பொதுமக்கள் புகார் அளிக்கக்கூடிய செல்போன் செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

By

Published : Mar 11, 2019, 2:04 PM IST

கடந்த காலங்களில் வேட்பாளர்கள் தாங்கள் காட்டும் சின்னத்தையே வாக்காளர்கள் தங்களது பிரதான சின்னம் என நினைத்து வாக்களித்து வந்தனர். முறைகேடுகள் குறித்த எந்த புகாரும் தெரிவித்தாலும், நடவடிக்கை என்பது கேள்விக் குறியாகவே இருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் மக்கள் கையில் சாட்டைக் கொடுத்து சுழற்ற செய்வது போன்று, புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதை பற்றி தற்போது பார்ப்போம், மக்களவை தேர்தலுக்கான அடிப்படை பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு வசதிகளை வாக்காளர்கள், வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக பொதுமக்களின் வசதிக்காக சி விஜில் (cVIGIL) எனும் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடமே இந்தச் செயலியை அறிமுகம் செய்துவிட்டாலும் இப்போதுதான் இதற்கான தேவை அதிகரித்திருக்கிறது. பொதுமக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, நடத்தை விதிகள், தேர்தல் செலவு தொடர்பான விதிமீறல்களை புகைப்படம் அல்லது வீடியோவாக எடுத்து பதிவேற்றம் செய்யலாம்.

இந்த தகவல் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பெறப்பட்டு 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் தகவல் அனுப்பியவரின் கைபேசி எண்ணுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அவ்வப்போது குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இறுதியாக தேர்தல் அதிகாரியால் எடுக்கப்பட்ட இறுதி நடவடிக்கை அறிக்கை அனுப்பப்படும். கைபேசி எண் இல்லாமல் வரும் தகவல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.

பதிவிறக்கம் செய்வது எப்படி?

முதலில் ‘C Vigil’ செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் (இன்ஸ்டால்) செய்த பிறகு இந்தச் செயலியினுள் சென்று மொழியைத் தேர்வுசெய்ய வேண்டும். அதன்பிறகு செல்போன் எண்ணைப் பதிவு செய்தால், ஒருமுறை பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டு (OTP) வரும். அதை உள்ளிட்ட பிறகு பெயர், முகவரி, பின்கோடு ஆகியவற்றைப் பூர்த்தி செய்யவும். அதைத் தொடர்ந்து செயலியைப் பயன்படுத்தலாம். செல்போன் எண்ணைப் பதிவு செய்யாமலும் செயலியைப் பயன்படுத்தலாம். ஆனால், லோகேஷன் ஆப்ஷனை அனுமதிக்க வேண்டும்.
புகார் அளிப்பது எப்படி ?

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் நிகழ்வை புகைப்படம் அல்லது 2 நிமிட வீடியோவாக எடுத்து புகாராக பதிவு செய்யலாம். இருப்பிடத்தைக் காட்டுவதற்காக Auto location capture ஆப்ஷன் வசதியாக இருக்கும். ஆனால், ஏற்கெனவே எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோவை இந்த செயலி மூலம் அனுப்ப முடியாது.

புகாரின் பிரதிபலன் என்னவாயிருக்கும்:

இந்த செயலியானது புகார் பதிவை ஏற்க சுமார் 5 நிமிட நேரம் எடுத்துக்கொள்ளும். புகார் அளித்தபிறகு, அனுப்பியவரின் செல்போனுக்கு, அடையாள எண் (Unique ID) அனுப்பப்படும். இந்த எண்ணைக் கொண்டு, நமது புகார் என்ன நிலையில் இருக்கிறது என்பதை டிராக் (Track) செய்து தெரிந்துகொள்ளலாம். அனுப்பக்கூடிய புகார்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு (அதிகாரிகளுக்கு) செல்லும். பின்னர், தேர்தல் பறக்கும்படை அல்லது தனிப்படை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு 15 நிமிடத்தில் விரைந்து சென்று, அரை மணி நேரத்துக்குள் விசாரணை நடத்துவார்கள். புகாரின் உண்மைத்தன்மையை அறிந்து, மாவட்டத் தேர்தல் அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்.

100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை:

அவர் இதுகுறித்து 50 நிமிடங்களுக்குள் விசாரணை நடத்துவார். பின்னர் தேர்தல் ஆணையத்தின் தேசிய குறைதீர்வுமையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புகார் அளித்த 100 நிமிடங்களுக்குள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கைபேசி செயலிகளில், சிவிஜில், பிடபிள்யூடி ஆகிய செயலிகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. சுவிதா செயலிகள் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டதும் செயல்பாட்டுக்கு வரும். தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார குறும்படம் தயாரிப்பதற்காக நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை ஓவியா உள்ளிட்டோரிடம் நேரம் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

ABOUT THE AUTHOR

...view details