ஹரியானா மாநிலம், குருகிராமிலிருந்து மத்தியப் பிரதேசத்தின் பன்னாவுக்கு பேருந்து ஒன்று 34 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, இன்று (ஆக. 19) காலை ஆக்ரா தெற்கு நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவன உடைகளை அணிந்து, முகங்களை மூடிக் கொண்ட நான்கு பேர் கொண்ட கும்பல் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் அச்சுறுத்தி, பேருந்தினுள் ஏறியுள்ளனர்.
இதனையடுத்து, ஓட்டுநர், உதவியாளரை மிரட்டி, பேருந்தை விட்டு கீழ் இறங்குமாறு பயமுறுத்தியுள்ளனர். இதனால் ஓட்டுநரும், உதவியாளரும் பேருந்தை விட்டு கீழ் இறங்கவே, 34 பயணிகளுடன் பேருந்தை அக்கும்பல் கடத்தி சென்றுள்ளது. இந்நிலையில் பேருந்தில் பயணித்த பயணிகளை ஜான்சியில் இறக்கிவிட்ட கடத்தல்காரர்கள், பேருந்தை கொண்டு சென்றுள்ளனர்.
இது குறித்து ஆக்ரா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஆக்ரா துணை காவல் கண்காணிப்பாளர் பப்லோ குமார் கூறுகையில், பேருந்தின் ஓட்டுநர், உதவியாளர் அளித்த புகார் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.
கடத்தல் சம்பவம் குறித்து பேசிய உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி, பேருந்தை நிதி நிறுவனம் சட்டவிரோதமாக கைப்பற்றியுள்ளது. இந்த பேருந்தின் உரிமையாளர் நேற்று (ஆக. 18)இறந்துவிட்டார். பேருந்து எங்கு உள்ளது என கண்டுபிடிக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
இது குறித்து தெரிவித்துள்ள பேருந்து உரிமையாளர் குடும்பம், “பேருந்திற்கான நிலுவை தொகை எதுவும் கட்டப்படாமல் இல்லை” எனத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சற்று நேரத்துக்கு முன்பு கடத்தப்பட்ட பேருந்து கண்டறியப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க...நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரிக்க உத்தரவு!