கரோனா பெருந்தொற்று பாதிப்பு முடிவுக்கு வர சில காலம் தேவைப்படும் என்ற நிலையில், அதற்குள் ஜம்மு காஷ்மீரில் வேரூன்றியுள்ள 30 ஆண்டுகால பயங்கரவாதக் குழுக்களுக்கு முடிவுகட்ட இந்திய ராணுவம் களமிறங்கியுள்ளது. பயங்கரவாதிகளை எதிர்கொள்வதில் முன்னெப்போதும் இல்லாத அணுகுமுறைகள் தற்போது கையாளப்படுகின்றன.
பொது முடக்கம் அறிவிப்புக்குப் பின்னர் இதுவரை நடைபெற்ற 37 என்கவுன்ட்டரில் 91 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்மீரின் சிறப்புத்தகுதி (சட்டப்பிரிவு 370, 35ஏ) நீக்கப்பட்டபின் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டது.
இந்தக் கட்டுப்பாடு பிப்ரவரி மாத காலத்தில் தளர்த்தப்பட்ட நிலையில் கரோனா காரணமாக மார்ச் மாதத்தில் மீண்டும் ஊரடங்கு அமலுக்குவந்தது.
அரசியல் உறுதியற்றத்தன்மை ஒருபுறம், பனிக்காலம் நிறைவடைந்ததால் இமயமலை எல்லைப் பகுதிகள் வழியாகப் பயங்கரவாதிகள் ஊடுருவல் மறுபுறம் என நாட்டின் பாதுகாப்புப் படையினர் தற்போது சவாலான சூழலைச் சந்தித்துவருகின்றனர். இந்தச் சவாலான சூழலை எதிர்கொள்ள காஷ்மீர் மக்கள் பாதுகாப்புப் படையினருக்கு நல்ல ஒத்துழைப்பை தற்போது தருகின்றனர்.
இதன் விளைவாக பயங்கரவாதக் குழுக்களின் முக்கிய உறைவிடமான தெற்கு காஷ்மீர் பகுதியின் சோபியான், புல்வாமா, குல்காம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் இதுவரை 22-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். குறிப்பாக ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கியத் தலைவரான ரியாஸ் நய்கோ பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் உயிரிழந்தார். அத்துடன் பொது முடக்கம் அறிவிப்புக்குப் பின்னர் சுமார் 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.