புதுச்சேரியில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலிப் பதிவில், “புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 53 விழுக்காட்டினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை ஏற்பாடுகள் சரியில்லை என்று சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர். இவ்வாறு உண்மைக்கு புறமான பதிவுகளை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஊரடங்கு உத்தரவு என்பது கரோனா நோய் தொற்றுப் பரவலை குறைக்கும் ஒரு அம்சம்தான். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கரோனா தடுப்பு மருந்தான கோவாக்சினை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தை ஒன்பது மாதங்கள் பரிசோதனை செய்த பிறகே பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியும் என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.