லக்னோ:உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொண்டுவந்துள்ள லவ் ஜிகாத் சட்டத்துக்கு ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் சனிக்கிழமை (நவ.28) ஒப்புதல் அளித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவந்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி ஒருவர் திருமணத்துக்காக மதம் மாறினாமல் அது செல்லாது.
இந்தச் சட்டம் நாடு முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் இந்தியில் பதிவிட்டுள்ள பதிவில், “லவ் ஜிகாத்துக்கு எதிராக உத்தரப் பிரதேச அரசு கொண்டுவந்துள்ள சட்டம், சந்தேகங்கள் நிறைந்தது. எனினும் நாட்டில் வஞ்சகமான, பலவந்தமான மதமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக பல சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. ஆகவே, இந்தச் சட்டம் தொடர்பாக பாஜக அரசு மறுபரீசிலனை செய்ய வேண்டும். இதுவே பகுஜன் சமாஜ் கட்சியின் வலியுறுத்தல்” எனக் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி பலவந்தமாகவோ அல்லது ஆசை வார்த்தைகள் கூறியோ மதம் மாற்றி ஒருவரை திருமணம் செய்துகொண்டால் அந்தத் திருமணம் செல்லாது. குற்றஞ்சாட்டப்பட்டோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடியும்.
முன்னதாக இஸ்லாமியர்கள் திட்டமிட்டு இந்து பெண்களை மதம் மாற்றி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று குற்றம்சாட்டிய சங் பரிவார் அமைப்புகள் இதற்கு "லவ் ஜிகாத்" (Love Jihad) என பெயரிட்டது. மேலும் பலவந்தம் அல்லது ஆசை வார்த்தைகள் மூலம் நடைபெறும் மத மாற்றங்களை தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என இந்து அமைப்பினர் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க:உ.பியில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக பதிவான முதல் வழக்கு