பொதுத் துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்லில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வந்த பெண்ணிய செயற்பாட்டாளர் ரெஹானா ஃபாத்திமா, தனது முகநூல் பதிவுகள் மூலம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பரில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் பி.எஸ்.என்.எல் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பொதுத் துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் வழங்கிய பணி நீக்க உத்தரவில், “2018ஆம் ஆண்டு சபரிமலை யாத்திரை காலத்தில் பெண்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு எதிராக பல போராட்டங்கள் நடந்த காலகட்டத்தில், அரசு ஊழியரான ரெஹானா ஃபாத்திமா அதில் பங்கெடுத்துள்ளார். பி.எஸ்.என்.எல் ஊழியரான அவர் மீது இதன் விளைவாக கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பி.எஸ்.என்.எல்லில் பணிபுரியும் அலுவலர்கள் எப்போதும் அதன் விதிமுறைகளின் படி நடந்துகொள்ள வேண்டும். இதனை ரெஹானா ஃபாத்திமா மதிக்கவில்லை. அவரின் செயல்கள் வேண்டுமென்றே செய்யப்பட்டவை, அவர் தற்செயலானவை அல்ல. எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவரும் ரெஹானாவால் நிறுவனத்தின் நற்பெயர் தகர்த்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. ரெஹானா ஃபாத்திமாவின் நடத்தை குறித்து உள் விசாரணை நடத்தி முடித்த பின்னரே இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஃபாத்திமா, “தொலைத் தொடர்பு நிறுவனத்தின் இந்த முடிவைக் கண்டிக்கின்றேன். இந்த முடிவின் பின்னணியில் அரசியல் தலையீடு இருக்கிறது. எனக்கு எதிரான நடவடிக்கைக்கு டெல்லியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நான் அழப்போவதில்லை. வாழ வழியில்லை என அழக்கூடிய ஆள் நான் இல்லை. அந்த நிறுவனம் தனக்கு வழங்கிய கட்டாய ஓய்வூதிய உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வேன்” என தெரிவித்தார்.