கரோனா சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தை சமாளிக்க போராடிவரும் இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பிரிட்டன் அரசு 3 மில்லியன் பவுண்ட் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டிஷ் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிதியானது செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும். கரோனா தடுப்பு நடவடிக்கை மட்டும் காலநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு ஊக்கமளிக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய சிந்தனைகளுடன் வருபவர்களுக்கு 12 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பவுண்ட்கள் வரை பரிசுத் தொகை அளிக்கப்படும். இந்த ஆராய்ச்சிகளுக்கான தொகையை நிர்ணயிக்க சர்வதேச உறுப்பினர் ஒருவருடன் இணைந்து கல்வி தொழில் கூட்டமைப்பில் செலவுகள் குறித்து சமர்பிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31 ஆகும்.
இந்தியா, பிரிட்டனுக்கு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பில் நீண்ட வரலாறு உள்ளது என இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதர் பிலிப் பார்டான் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கரோனாவும், காலநிலை மாற்றமும் மனிதகுலத்துக்கு மாபெரும் சவாலாக மாறியிருக்கின்றன. கல்வித் துறை, தொழில் துறை மற்றும் அரசு ஆகியவை புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும். தேசங்கள் ஒன்றிணைந்து மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் தூதரகத்தில் உள்ள பிரிட்டன் - இந்தியா தொழில்நுட்ப உடன்படிக்கைக்கான தலைவர் கரன் மெக்லுஸ்கி, கரோனா போர் அல்லது காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் நாயகர்களை கண்டெடுக்க இந்நிதி பயன்படும். அனைத்து மக்களை பாதுகாக்கும் இப்பணியில் இந்தியாவுடன் இணைந்து பணிபுரிவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 2018, லண்டனில் பிரதமர் மோடி - தெரசா மே ( முன்னாள் பிரிட்டன் பிரதமர்) சந்திப்பின்போது தொழில்நுட்ப உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. வணிகம், முதலீடு, நிதி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பிரிட்டன் ஒத்துழைப்பை பெறுவதே இப்பயணத்தில் மோடியின் நோக்கமாக இருந்தது. இதன்மூலம் இந்தியா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த சிறு, குறு தொழில் முனைவோர் சந்தைகளை எளிதாக அணுக முடியும். 2022ஆம் ஆண்டு 14 மில்லியன் பவுண்ட்களை பிரிட்டன் முதலீடு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.