மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத விதமாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவியேற்ற நிலையில், பாஜக ஆட்சி அமைத்த விதம் சட்டவிரோதமானது எனக் கூறி விவகாரத்தை சிவசேனா உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது.
நேற்று நடைபெற்ற விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'பெரும்பான்மைக்கான ஆதரவுக் கடிதத்தை ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் நாளை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், மத்திய அரசு சார்பில் ஆஜரான துணைத் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, 'மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைக்க ஆளுநரிடம் அளிக்கப்பட்ட ஆதரவுக் கடிதம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 54 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கடிதத்தை அஜித் பவார் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 170 எம்.எல்.ஏக்களின் ஆதரவு பாஜக தலைமையிலான ஆட்சிக்கு உள்ளதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்புக்காக ஆளுநர் உத்தரவிட்ட பின் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது' என வாதிட்டார்.
தேவேந்திர ஃபட்னாவிஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, 'பாஜகவுக்கு ஆதரவு கிடையாது என கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேறியதால் தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஃபட்னாவிஸ் ஆட்சியமைத்துள்ளார். மகாராஷ்டிராவில் நடைபெறுவது தாக்கரே, பவார் குடும்பங்களுக்கான அதிகார சண்டை, இதில் அரசுக்கு சம்பந்தமில்லை' என வாதிட்டார்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது என துஷார் மேத்தா கூறிய நிலையில், இந்த வாதத்திற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா, 'இதுவரை உள்ள நடைமுறைப்படி நம்பிக்கை வாக்கெடுப்பானது 24 மணிநேரத்தில் நடத்தப்பட்டது. பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டுமே தவிர ஆளுநர் மாளிகையில் நடத்தக்கூடாது' என தெரிவித்தார்.