ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டத்தின் மண்டேட்டா நகரைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஜஷீத், வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், சிறுவன் ஜஷீத்தை கடத்தி சென்றனர். இதைப் பார்த்த சிறுவனின் பாட்டி பார்வதம்மா கத்தி கூச்சலிட்டார். இருந்தும், அந்த நபர்கள் சிறுவனுடன் தப்பி சென்றனர். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுவன் ஜஷீத் கடத்தப்பட்டது தொடர்பாக ஏழு படைகளை அமைத்த காவல்துறையினர் கிழக்கு கோதாவரியில் தீவிரமாக தேடினர்.
கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு - பெற்றோர் நெகிழ்ச்சி
கோதாவரி: கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட நான்கு வயது சிறுவனை, காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
இரண்டு நாட்களாக எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சிறுவன் கடத்தப்பட்டது தொடர்பாக சிறுவனின் பெற்றோர்களுக்கு தொலைபேசியில் மிரட்டல்கள் வந்ததையடுத்து, குத்துகுலுரு கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் கடத்தல் நபர்கள் சிறுவனை விட்டுச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சிறுவன் ஜஷீத்தை மீட்டு அவனது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது என்னை எங்கே தங்க வைத்தனர் என தெரியவில்லை. தன்னை கடத்தியவர்களில் ஒருவர் பெயர் ராஜூ எனக் கூறினான்.
மேலும், கடத்தல்காரர்கள் எனக்கு இரண்டு நாட்களாக இட்லி மட்டுமே வாங்கி கொடுத்தனர், அடிக்கவோ, துன்புறுத்தவோ இல்லை எனக் கூறினான். மேலும், பெற்றோரை பார்த்த மகிழ்ச்சியில் அச்சிறுவன் தனது பெற்றோருக்கு முத்தம் கொடுத்து மகிழ்ந்த காட்சி வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடைசியாக அவனது குறும்பு வீடியோக்களும் பகிரப்பட்டு வருகிறது.