ஒரு சிறு கவனக்குறைவு எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த குழந்தையின் வீட்டிற்கு சென்று பார்த்தால் புரியும். தொடர் அழுகுரல் அனைத்து அறைகளிலும் கேட்டுக்கொண்டே இருக்கும். இந்த மாதிரியான உயிரிழப்புகள் அரசுகளின் கவனக்குறைவால் மட்டும் நிகழ்வதில்லை, தனிமனிதர்களின் மெத்தனத்தாலும் நிகழ்கிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சுஜித் என்ற குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியதற்கு பெற்றோர்களும் ஒரு காரணம். அவர்கள் கவனமாக இருந்திருந்தால் இந்த சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். மேலும், ஐந்தாண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கிணற்றை சரியாக அடைத்திருக்க வேண்டும். இதுபோன்ற சிறு சிறு கவனக்குறைவே இதுபோன்ற பெரும் துயரத்திற்கு காரணம்.
பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகளால் தொடர் உயிரிழப்புகள் இந்தியா முழுவதும் நிகழ்ந்ததை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்திற்கு ஒருவர் கடிதம் எழுதுகிறார். இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை பொது நல வழக்காக நீதிமன்றம் எடுத்து விசாரித்தது. அப்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி. பாலகிருஷ்ணன், இதுபோன்ற பிரச்னைகளுக்கு எளிய தீர்வு உள்ளது. ஆனால், அனைத்தையும் கடினமாக்கிக் கொள்கிறீர்கள் என குறிப்பிட்டார். அவர் உதித்த சொற்கள் இன்றளவும் பொருந்தும். பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகளை அடைக்காமல் இருக்கும் அரசின் அலட்சியம் பல சுஜித்துகளை காவு வாங்கியுள்ளது.
2010ஆம் ஆண்டு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த இந்திரா ஜெய்சிங், துளைகளை உருவாக்கிவிட்டு அதனை கேட்பாரற்று விட்டுபோகும் நிறுவனங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்ற ஆலோசனையை உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்கிறார். இதனை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு ஏற்றுக்கொண்டது. பின்னர், பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகளை 12 வாரங்களுக்குள் மூட அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த 12 வார காலம் இன்னும் வரவில்லைபோலும், இந்த மெத்தனபோக்குதான் சுஜித் போன்ற குழந்தைகள் அவதிப்படுவதற்கு காரணம்.