கடந்த சில நாள்களாக இந்திய - சீன எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை சீன ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், மேற்கு பகுதிகளில் பாகிஸ்தானுடன் தங்களது எல்லைப் பகுதிகளை பகிர்ந்துள்ள மக்களின் மனநிலை குறித்து அறிவதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதி மக்கள் நமது ஈடிவி பாரத் சார்பாக பேட்டி காணப்பட்டனர்.
இரு நாடுகளின் உறவுமுறை குறித்து அப்பகுதி மக்களின் எண்ண ஓட்டம், கருத்துக்கள் பின்வருமாறு :
ஜெய்சல்மர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய - பாகிஸ்தானின் சர்வதேச எல்லையைக் கொண்டுள்ள கிர்த்துவாலா கிராம மக்கள் கூறுகையில், ”நாங்கள் 35 முதல் 40 கி.மீ வரை பாகிஸ்தானுடன் எங்களது எல்லைகளைப் பகிர்ந்துள்ளோம். தற்போது நிலைமை கட்டுக்குள்ளே உள்ளது. ஆனால் பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் மோசமான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடலாம்” என்றனர்.
80 வயதான பகவான் சிங் நம்மிடம் பேசுகையில், ”1965, 1971ஆம் ஆண்டுகளில் எல்லைகளில் நிலமை மிகவும் மோசமான நிலையில், ராணுவ வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்கக்கூட எந்த வழிகளும் இல்லாத சூழல் நிலவியது. அப்போது, கிணற்றில் இருந்த தண்ணீரை சேகரித்து ஒட்டகங்களின் உதவியுடன் அனுப்பி வைத்தோம்” என நினைவுகள் ததும்ப கூறினார். தற்போதும் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஏதேனும் துயரங்கள் நேர்ந்தால் எந்த வகையிலேனும் உதவத் தயாராக இருப்போம் எனத் தெரிவித்தார்.
பர்மர் :
பர்மர் மாவட்டம், தம்லோர் கிராம மக்கள், நாள் ஒன்றுக்கு 50 டிகிரி செல்சியஸ் வரை அங்கு வெப்பம் இருப்பதாகவும், இந்த சூழ்நிலையில் நாட்டுக்காக போராடும் வீர உள்ளங்கள்தான் தங்களைப் பாதுகாத்து வருகின்றனர் எனவும் கூறினர்.