கரோனா பரவல், நோயெதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை நமக்கு கற்றுத் தந்துள்ளது. குளிர்காலம் தற்போது தொடங்கியுள்ள நிலையில், நமது நோயெதிர்ப்பு சக்தி கொஞ்சம் பலவீனமடைந்தாலும் சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய் பாதிப்புகள் எளிதாக ஏற்படும். எனவே, அவற்றை எதிர்கொள்ள உதவும் பருவகால பழங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
ஆரஞ்சு
இந்த ருசியான குளிர்காலப் பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. ஆரஞ்சுப் பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கொழுப்பைக் குறைப்பதோடு, எடைக் குறைப்பதற்கும் இது உதவுகிறது. சிட்ரஸ் குடும்பத்தின் பழமாக இருப்பதால், இது நமது சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் நன்மை பயக்கும். வைட்டமின் சி தவிர ஆரஞ்சிலும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. இது ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது. மேலும், பருவகால நோய்த்தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் இப்பழம் உதவுகிறது.
கிவி
கிவி பழம் மிகவும் ஆரோக்கியமான பழமாகும். ஏனெனில் இதில் பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கண்பார்வையை மேம்படுத்த இப்பழம் பலராலும் பரிந்துரைக்கப்படுகிறது. கிவியில் ஃபைபர், ஆக்ஸிஜனேற்றிகள், பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, செரிமான அமைப்பையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
மாதுளை
மாதுளையின் நன்மைகள் அனைவருக்கும் தெரியும். எவரேனும் நோய்வாய்ப்படும்போதெல்லாம் பொதுவாக டாக்டர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரே பழம் மாதுளை ஆகும். மாதுளை நார்ச்சத்து, வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் பி, இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. அதன் குணப்படுத்தும் பண்புகள் காரணமாக, இது பல நோய்களில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ரத்த அழுத்த நோயாளிகளுக்கும் இப்பழம் மிகவும் உதவியாக இருக்கும்.