மதுபானக் கடைகளுக்கு முன்பு மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக Bev Q என்ற செயலியை கேரளா அரசு அறிமுகப்படுத்தியது. இச்செயலி மூலம் மதுபானம் வாங்குவதற்கு மக்கள் டோக்கன் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இன்று (மே 28) மதுபானம் விற்பனை தொடங்கும் என அறிவித்திருந்த நிலையில், நேற்று மாலை வரை கூகுள் பிளே ஸ்டோரில் செயலி தரவிறக்கத்திற்கு வராதததால் மதுப் பிரியர்கள் சோகத்தில் இருந்தனர். பின்னர், இரவில் தான் பிளே ஸ்டோரில் செயலி ஆன்லைனுக்கு வந்தது.
இத்தகவல் காட்டுத் தீ போல் மக்கள் மத்தியில் பரவ தொடங்கியது. ஒரே நாளில் லட்சத்திற்கும் அதிகமானோர் செயலியை தரவிறக்கம் செய்து டோக்கனை பெற்றுக்கொண்டனர். மதுபானம் விற்பனை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டது. மக்கள் டோக்கன்களை பெறுவதற்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயலியில் புக்கிங் செய்ய முடியும். செயலி தரவிறக்கம் செய்யும் கைப்பேசி இல்லாதவர்கள் குறுஞ்செய்தி மூலமாகவும் டோக்கன் புக்கிங் செய்துகொள்ளலாம்.
மேலும், மதுபானக் கடைகளுக்கு வரும் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்திருந்தது. அதன்படி, சளி, காய்ச்சல் உள்ளவர்களுக்கு கடைக்குள் அனுமதி இல்லை என்றும், ஒரே நேரத்தில் கடைக்கு வெளியில் 5 நபர்கள் மட்டுமே இருக்க அனுமதி என்றும் உத்தரவிட்டது. கடைக்கு வருபவர்கள் தகுந்த இடைவெளியை பின்புற்றுவதை உறுதிசெய்ய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.