பஞ்சாபில் அமிர்தசரஸ், படாலா , டார்ன்தரன் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 111 பேர் விஷ சாராயம் குடித்ததில் உயிரிழந்துள்ளனர். ஆரம்பத்தில் குறைவானவர்கள் உயிரிழந்த நிலையில், மருத்துவமனை சிகிச்சையிலிருந்த பலர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினர் அதிரடி நடவடிக்கையும் எடுத்தனர்.
கடந்த மே 18ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி காலக்கட்டத்தில் மட்டுமே சட்ட விரோத மதுவிற்பனை தொடர்பாக, 270 வழக்குப் பதிவுகளும், கடத்தல்காரர்கள் 301 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி மதுபான கும்பலை தடுக்க காவல் ஆணையர் தலைமையில் தனிப்படை ஒன்றும், இரண்டு மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்டிருந்தது.
இந்தத் தனிப்படையின் அதிரடி சோதனையால் பலர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய சோதனையில், மதுபானம் தயாரிக்க பயன்படும் இரண்டு லட்சம் லிட்டருக்கும் அதிகமான மஹுவா லஹான், 1,612 லிட்டர் கள்ளச் சாராயம் , 4,606 லிட்டர் ஒயின்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனக் கருதப்பட்ட 6 காவலர்கள், 7 கலால் அலுவலர்கள், வரிவிதிப்பு அலுவலர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.