ஸ்ரீநகர் :பயங்கரவாத எதிர் நடவடிக்கை என்ற பெயரில் பாதுகாப்பு படையினரால் போலி என்கவுண்டர் செய்யப்பட்ட மூன்று அப்பாவி பொதுமக்களின் உடல் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த ஜூலை 18ஆம் தேதி தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தை அடுத்த அம்ஷிபோராவில் கிராமத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மூவர் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் தகவல் வெளியிட்டிருந்தது. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ராணுவம் பயங்கரவாதிகளை சுட்டுக்கொல்லவில்லை என்றும், ஜம்மு ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்பாவிகள் என்றும், ஜம்மு-காஷ்மீர் மனித உரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டனர்.
உயிரிழந்த அந்த மூவரும் சோபியான் மாவட்டத்திற்கு கூலித் தொழிலாளர்களாகப் பணியாற்ற வந்த இம்தியாஸ் அஹ்மத், அப்ரார் அஹ்மத் மற்றும் முஹம்மது இப்ரார் என அடையாளம் காணப்பட்டது. கூலி வேலைக்காக, அங்கு வந்தவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து போலி என்கவுண்டரில் ராணுவம் படுகொலை செய்திருப்பது அம்பலமானது.
இந்த ராணுவ நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலி என்கவுண்டர் குறித்து கடும் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்தன. ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் இந்த செய்தி பேசும் பொருளாக மாறியது. இதையடுத்து, இந்த என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டது.
ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்ட 1990-யின் விதிகளை ராணுவ வீரர்கள் மீறியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால் அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்தது.
அத்துடன், உயிரிழந்த அந்த மூன்று அப்பாவிகளின் உடல்கள் சுமார் 70 நாள்களுக்கு வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தை அடுத்த காந்தமுல்லா பகுதியில் உள்ள மயான குழியிலிழுந்து வெளியே எடுக்கப்பட்டு, உடற்கூராய்வு சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொல்லப்பட்ட மூன்று இளைஞர்களின் டி.என்.ஏ மாதிரிகள் பொருந்தியதை அடுத்து குடும்பங்களின் கூற்று பாதுகாப்பு அலுவலர்களால் உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பயங்கரவாத எதிர் நடவடிக்கை என்ற பெயரில் பாதுகாப்பு படையினரால் போலி என்கவுண்டர் செய்யப்பட்ட மூன்று அப்பாவி பொது மக்களின் உடல் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ராணுவம் நீதிமன்றம் நடத்திய ஆரம்ப விசாரணையில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த நிலையான இயக்க நடைமுறையை (எஸ்ஓபி) பின்பற்றாமல் அம்ஷிபோராவில் என்கவுண்டர் நடத்திய ராணுவ வீரர்களை பணியிலிருந்து விலக வேண்டுமென உத்தரவிட்டது.