டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தின் 21 மாவட்டங்களிலுள்ள நான்காயிரத்து 371 பஞ்சாயத்து தொகுதிகளில் பாஜக ஆயிரத்து 835 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானில் ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆயிரத்து 718 இடங்களை கைப்பற்றியுள்ளது.
இந்த தேர்தல் முடிவுகள் நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை அதிகரித்துள்ளது. முன்னதாக ஹைதராபாத்தில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலிலும் பாஜக எதிர்பாராத அளவு வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜகவிற்கான இந்த வெற்றி பெரிதளவு கொண்டாடப்படுகிறது.
அதுமட்டுமின்றி, உள்ளாட்சித் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெறாது என காலங்காலமான நம்பிக்கையை உடைக்கும் விதமாக இந்த வெற்றி பார்க்கப்படுவதாகவும் பாஜகவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, " ராஜஸ்தானின் கிராமப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள், பெண்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் பாஜக மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜகவின் இந்த வெற்றி மக்கள் பிரதமர் நரேந்திர மோடி ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்களுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான எதிரொலியாக தெரிகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.