கேரள மாநிலத்தில் 14 மாவட்டங்களில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அங்குள்ள 6 மாநகராட்சிகள், 86 நகராட்சிகள், 152 ஊராட்சி ஒன்றியங்கள், 941 கிராம பஞ்சாயத்துகள் ஆகியவற்றில் பதிவான வாக்குகள் நேற்று (டிச.17) எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மாநிலத்தை ஆளும் கட்சியான சிபிஎம் தலைமையிலான் இடதுசாரி கூட்டணியானது (எல்.டி.எஃப்) 4 மாநகராட்சிகள், 38 நகராட்சிகள், 11 மாவட்ட ஊராட்சிகள், 93 ஊராட்சி ஒன்றியங்கள், 403 கிராம பஞ்சாயத்துகளில் பிரமாண்ட வெற்றியை உறுதிசெய்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இரண்டாம் இடத்தையும், பாஜக மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த தேர்தல் முடிவுகளில் மிகவும் சுவாரஸ்யத்தை உண்டாக்கும் வகையில், கொச்சி காங்கிரஸ் மேயர் வேட்பாளர் என்.வேணுகோபாலை பாஜக வேட்பாளர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைய வைத்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் தொடர்பாக கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆளும் இடதுசாரி முன்னணி மீதான வெறுப்புப் பரப்புரைகள் அனைத்தையும் தேர்தல் முடிவுகள் பொய்யாக்கியுள்ளன. மதச்சார்பின்மையைப் பாதுகாத்து வருவது, வளர்ச்சியை முன்னெடுத்து வரும் அரசியல் பணிகள் காரணமாகவே இடதுசாரி முன்னணிக்கு மக்களின் ஆதரவு பெருகியுள்ளது.
ஆளும் கூட்டணி மீது பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பரப்பி வந்த அவதூறுகளை மக்கள் நிராகரித்துள்ளனர். மாநிலத்தில் காங்கிரஸ் வலுவிழந்துள்ளதைத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. முந்தைய தேர்தல்களில் வெற்றி பெற்ற இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் தோல்வியைச் சந்தித்துள்ளன. அந்த இடங்களில் இடதுசாரி முன்னணி வெற்றி பெற்று, வரலாற்றை மாற்றியுள்ளது. மாநிலத்தில் இடதுசாரி முன்னணிக்கான ஆதரவு அதிகரித்துள்ளது” என்றார்.
கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் அண்மையில், நடந்து முடிந்த தெலங்கானா (ஹைதராபாத்), ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தல்களில் தொடர் வெற்றியை பதிவு செய்த பாஜகவுக்கு கேரள தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளதென அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க :மீனவர் வலையில் சிக்கிய ராணுவ விமானம்!