டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் அதே மாதம் 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், ஹரிநகர் தொகுதியில் பாஜக சார்பாகக் களமிறங்கும் தஜிந்தர் சிங் பக்காவுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். முன்னதாக, தேர்தலை முன்னிட்டு ஒரு ராப் பாடலை வேட்பாளர் பக்கா வெளியிட்டிருந்தார். இந்தப் பாடலுக்கு செலவான கணக்கு வழக்குகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்காத காரணத்தால், இவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், 48 மணி நேரத்திற்குள் இந்த விவகாரம் குறித்து பதிலளிக்க வேண்டும் என்றும், தவறினால் கண்காணிப்புக் குழு முடிவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பக்கா கூறுகையில், "வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு முன்பே பாடல் வெளியிடப்பட்டது. இப்போது, மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. நான் தேர்தல் ஆணையத்தை மதிக்கிறேன். என்னுடைய வழக்கறிஞர்கள் பதிலளித்துள்ளனர். நான் ஹரிநகர் தொகுதியில் வெற்றிபெற்றுவிடுவேன் என்ற அச்சம் ஆம் ஆத்மி கட்சிக்கு உள்ளது" என்றார்.