குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு பரப்புரை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், பெங்களூருவின் கோரமங்களா பகுதியிலுள்ள ஜோதி நிவாஸ் கல்லூரி சுவரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான சுவரொட்டி ஒன்றை உள்ளூர் பாஜகவினர் ஒட்டியுள்ளனர்.
இதற்கு அக்கல்லூரியில் படிக்கும் மாணவிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து இணையத்தில் பரவிவரும் வீடியோவில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது என்ற போஸ்டரை கல்லூரி சுவரில் அவர்கள் ஒட்டுகின்றனர். அதற்கு மாணவிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர்.
அப்போது பாஜக நிர்வாகி ஒருவர், "உங்களுக்கு குடிமக்களைப் பற்றிய கவலை இல்லை. நீங்கள் உங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறீர்கள். முதலில் நீங்கள் இந்தியாவைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அப்படி சிந்திக்காவிட்டால் நீங்கள் இந்தியர்களே அல்ல " என்று உரத்த குரலில் கத்துகிறார்.