பிகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி மொத்தம் 243 தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய நாள்களில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி பரிஷத் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராக ஜனசக்தி பரிஷத் கட்சி போட்டியிட முடிவெடுத்துள்ளது.
இருப்பினும் பாஜக போட்டியிட உள்ள தொகுதிகளில் தனது வேட்பாளர்களை களமிறக்கப் போவதில்லை என அக்கட்சி அறிவித்துள்ளது.
இதன்மூலம், அக்கட்சி பாஜகவின் பீ டீம்மாக செயல்படுவது தெரியவந்துள்ளது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில், பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூட்டணி மாறினாலும், அவருக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கில் இந்த வியூகத்தை பாஜக அமைத்துள்ளதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய ஜனதா தளத்தின் வாக்கு வங்கியை குறைத்து மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக விளங்கவே இந்தத் திட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், மாநிலத்தில் நிதிஷ்குமாருக்கு எதிராக அதிருப்தி அலை வீசி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. லோக் ஜனசக்தி பரிஷத் கட்சியின் பின்னால் பாஜக இருந்து அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என கூறப்படுகிறது.
இதையும் படிங்க:ராகுலின் ஆடம்பர பேரணிகள் வரவிருக்கும் தேர்தலுக்கானது - விவசாயிகள் விமர்சனம்