டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக பெற்ற படுதோல்வியைத் தொடர்ந்து, பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, அக்கட்சியின் பொதுச் செயலாளர்களை வரவழைத்து, டெல்லியின் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்கவுள்ளார். இன்று மாலை ஐந்து மணியளவில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலந்துகொள்ள உள்ளார்.
டெல்லி தேர்தலுக்காக பாஜக சார்பில் 21 நாட்கள் சூறாவளிப் பரப்புரை மேற்கெள்ளப்பட்டது. இந்த தேர்தல் பரப்புரையில், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்குபெற்றனர். பிரதமர் மோடி கூட சில தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்றார். ஷாகீன் பாக் போராட்டம், சட்டப்பிரிவு 370 நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டம், ராமர் கோயில் விவகாரம் போன்றவை இந்தப் பரப்புரையில் முதன்மையாக்கப்பட்டன.