புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "மகாராஷ்டிராவில் சதித் திட்டம் தீட்டி பாஜக ஆட்சி அமைத்து இருப்பது ஜனநாயகப் படுகொலை. இது இந்திய நாட்டின் இறையாண்மையையும், மக்கள் தீர்ப்பையும் அவமதிக்கின்ற செயலாகும்.
பாஜக, மற்ற கட்சியினரை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கும் வேலையை செய்து வருகிறது. அது தற்போது மகாராஷ்டிராவிலும் தொடர்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பணத்துடன் அதிகார பலம் கொண்டு, பாஜக ஆட்சி அமைத்து வருகிறது. இதில் ஆளுநர்கள் கைப்பொம்மையாக பயன்படுத்தப்படுகிறார்கள். மேலும் சிவசேனாவை பழிவாங்கும் நோக்கத்தில் அது செயல்படுகிறது. கூடிய விரைவில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டு ஆதித்யா தாக்கரே முதலமைச்சர் ஆவார்" எனத் தெரிவித்தார்.